Search This Blog

Monday, August 25, 2025

தமிழ் வணக்கம்

                                                            

தமிழ் வணக்கம்


பிறப்பித்த தென்தாய் பிறவியில் நாளும்
சிறப்பித்த துன்சுவை இப்புவி மீதினில்
கற்றதுவும் பெற்றதுவும் உற்றதுவும் உன்வழி
மற்றன   இற்றழியும் காண்.

எண்ணத்தின் தாயென உள்ளுருக் கொண்டனை
வண்ணபல தாயன நூல்பல தந்தனை
வற்றாத நீர்ச்சுனை என்றிங்குக் காலம்
முற்றாத பேரிளந் தாய்.

தானெனத் தன்னை உணர்ந்துத் தவித்திடும்
ஊனெனப் பாவிய மெய்யினால் வாழ்வினைத்
தேனென என்றும் திளைத்து உனதுபுகழ்
வானென உய்ந்தேன் நினைந்து.

பொன்னே மணியே மதியே ஒளியே
மன்னே   அணியே பதியே கதியே
இன்னும்  என்னன்ன என்னே எனச்சொல்லி
பன்னுவன் உன்புகழ்க் காப்பு.

வளம்பல  தந்தனை சீர்நெறி தந்தனை
வாழ்வுயர் சிந்தனை நேர்படச் செய்தனை
சிற்றறிவன் கற்றதினால் பேருவகை தந்தனை
நின்மலர்த்தாள் ஏத்துவன்ப ணிந்து.